ஷா ஆலாம், அக் 29 — திமோர் லெஸ்தே, ஆசியான் (ASEAN) அமைப்பில் உறுப்பினராக முழுமையாக சேருவதற்கு மலேசியா தனது ஆதரவைத் தொடர்ந்து வழங்கி, அந்தச் செயல்முறையை விரைவுபடுத்துவதில் உறுதியுடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.
அந்நாட்டின் சேர்க்கை என்பது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மட்டுமல்ல, மாறாக தென்கிழக்கு ஆசியாவின் ஒற்றுமையும் மதிப்புகளையும் வலுப்படுத்துவதற்கும் உதவும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
“மலேசியாவும் ஒருகாலத்தில் பொருளாதார அடித்தளத்தையும் நிலைத்தன்மையையும் உருவாக்கும் சவாலான கட்டத்தைக் கடந்தது. எனவே, உறுப்பினர் சேர்க்கை பொருளாதார வலிமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படக் கூடாது. ஒரு நாட்டின் உறுதி, அர்ப்பணிப்பு மற்றும் தேசிய உணர்வும் முக்கியமானவை,” என்று அவர் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டார்.
திமோர் லெஸ்தே நீண்ட மற்றும் துயரமிக்க காலனித்துவப் போராட்ட வரலாற்றைக் கொண்டிருந்தாலும், அதன் மக்கள் தங்கள் சுதந்திரத்தைப் பெறும் முயற்சியில் உறுதியுடன் இருந்தனர் என அவர் தெரிவித்தார்.
துன் டாக்டர் மகாதீர் முகமட் ஆட்சிக் காலத்திலேயே திமோர் லெஸ்தே சுதந்திர முயற்சிக்கு ஆதரவு தெரிவித்த முதல் நாடுகளில் மலேசியாவும் ஒன்றாகும் என்றார்.
தொழில்நுட்ப ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், திமோர் லெஸ்தேவின் ஆசியான் சேர்க்கைச் செயல்முறைக்கு உதவ ஆசியான் செயலாளரகத்தில் அதிகாரிகளை நியமிக்கவும் விஸ்மா புத்ரா (நடவடிக்கை எடுத்துள்ளது,” என்று அவர் விளக்கினார்.





