ஷா ஆலம், அக் 29 — சிலாங்கூரில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், போதிய ஓய்வூதியம் மற்றும் சேமிப்பும் இல்லாதது, உயர்ந்து வரும் வாழ்வு செலவுகளும் பலரை வறுமைக்குள் தள்ளக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தரவுகள் அடிப்படையில், 50 முதல் 54 வயதுக்கிடையில் உள்ளவர்களின் ஊழியர் சேமநிதி சேமிப்பு (EPF) சராசரியாக வெறும் RM48,311 மட்டுமே உள்ளது என பெண்கள் மேம்பாடு மற்றும் சமூக நலன் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அன்ஃபால் சாரி தெரிவித்தார்.
இது போதுமான தொகையாக இல்லை, ஏனெனில் தற்போதைய கணக்குப்படி ஒரு மூத்த குடிமகனின் மாதாந்திர வாழ்வுக்கான செலவு சுமார் RM2,690 ஆகும்.
“சராசரி ஆயுள் 78 வயதாக இருக்கும் போது, இந்தச் சேமிப்பில் அவர்கள் எப்படி வாழ முடியும் என்று நினைத்துப் பாருங்கள். ஒரு வசதியான வாழ்க்கைக்கு தேவைப்படும் தொகை சுமார் RM390,000 ஆகும். அதாவது வித்தியாசம் மிகப் பெரிது,” என்று அவர் சமீபத்தில் மீடியா சிலாங்கூரின் பிசாரா செமாசா’ நிகழ்ச்சியில் விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியபோது கூறினார்.
மேலும், பல மூத்த குடிமக்கள் நிலையான வருமானத்தை இழந்துள்ள நிலையில், சுகாதாரச் செலவுகள் தொடர்ந்து உயர்வது நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது என்றார்.
அரசாங்கம் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் நிதியுதவியை RM600 மில்லியனிலிருந்து RM1.26 பில்லியனாக உயர்த்தியிருந்தாலும், அந்தத் தொகை தற்போதைய தேவைகள் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விகிதத்துடன் ஒப்பிடும் போது இன்னும் போதுமானதாக இல்லை என அவர் கவலை தெரிவித்தார்.
இந்த பிரச்சனையை நாம் அனைவரும் பகிர்ந்து ஏற்க வேண்டிய பொறுப்பாகக் காண வேண்டும் என அன்ஃபால் சாரி கூறினார்.




