கோலாலம்பூர், அக் 29 - கடந்த ஐந்து ஆண்டுகளில் மாணவர்களிடையே தொழில்நுட்பம் மற்றும் தொழில் பயிற்சி திட்டத்தின் (திவேட்) மீதான ஆர்வம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
12-வது மலேசியா திட்டத்தின் கீழ் திவேட் தரவு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, திறன் மேம்பாட்டுத் துறையால் உருவாக்கப்பட்ட 'UP-TVET' பயன்பாட்டு அகப்பக்கம் மூலம் திவேட் மீதான ஆர்வம் அதிகரித்திருப்பதாக மனிதவள துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் முஹமட் தெரிவித்தார்.
"இந்த அகப்பக்கம் அனைத்து பொது மற்றும் தனியார் திவேட் நிறுவனங்களுக்கான சேர்க்கைகளை ஒருங்கிணைக்க, யு.பி.யு அகப்பக்கம் போல செயல்படுகிறது.
துணைப் பிரதமரால் 2024ஆம் ஆண்டு மே 20ஆம் தேதி தொடங்கப்பட்டதிலிருந்து, 'UP-TVET' பெர்டானா 2025-ஆம் ஆண்டு 23,038 சேர்க்கைகளை நிர்வகித்துள்ளது," என்றார் அவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திவேட் மீதான மாணவர்களின் வரவேற்பு மற்றும் தொழில்துறை தேவைகளைப் பூர்த்தி செய்ய திறமையான தொழிலாளர்களை உருவாக்கும் திட்டங்கள் குறித்து வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் சாஹிர் ஹசான் எழுப்பிய கேள்விக்கு அப்துல் ரஹ்மான் இவ்வாறு பதிலளித்தார்.
பெர்னாமா




