ஜகார்த்தா, அக் 29 — இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுக்கு அருகே நேற்றிரவு 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் வானிலை, காலநிலை மற்றும் புவியியல் அமைப்புக்கான நிறுவனம் (BMKG) தெரிவித்ததாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 9.40 மணிக்கு ஏற்பட்டது. இதன் மையப் புள்ளி தனிம்பார் தீவின் வடமேற்கே சுமார் 183 கிலோமீட்டர் தூரத்தில், 185 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கதால் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்றும் அந்நிறுவனம் இணையதளத்தில் உறுதிப்படுத்தினர்.
இந்த அதிர்வை, குறிப்பாக தனிம்பார் தீவின் தலைநகரான சவும்லாகி பகுதியில் உள்ள மக்கள் உணர்ந்தனர்.
இதனால், எந்தக் கட்டிடத்திலும் அல்லது வீட்டிலும் சேதம் ஏற்பட்டதாக எந்த புகாரையும் பெறப்படவில்லை என தனிம்பார் மாவட்டப் பேரிடர் மேலாண்மை முகமை (Disaster Management Agency) அவசரப் பிரிவு தலைவர் மைக்கேல் ஸ்டீவன் நரன் சின்ஹுவாவிடம் தெரிவித்தார்.
மேலும், இந்த நிலநடுக்கம் எந்த உயிர் இழப்பையும் ஏற்படுத்தவில்லை.




