ஷா ஆலம், அக் 29 - கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, ஜாலான் புக்கிட் கெமுனிங் முனீஸ்வரர் ஆலயத்தின் நீண்டகால நிலப் பிரச்சனைக்கு ஓர் உகந்த மற்றும் நிரந்தரமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த இணக்கம் ஏற்பட்டது.
இத் தீர்வின் மூலம், முனீஸ்வரர் ஆலயத்தை ஒரு புதிய இடத்திற்கு மாற்றுவதற்கும், அதற்கான முழு செலவையும் சம்பந்தப்பட்ட தரப்புகள் ஏற்பதற்கும் இருதரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று அங்குள்ள சிலைகள் புதிய இடத்திற்கு பாதுகாப்பாக மாற்றும் பணியும் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த இணக்கமான தீர்வு முயற்சிக்கு உதவிய சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் இங் ஸீ ஹான், சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மற்றும் கவுன்சிலர் யோகேஸ்வரி ஆகியோருக்கு ஆலய நிர்வாகத்தினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.




