கோலாலம்பூர், அக் 28 : மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம், பிற அரசாங்க முகமைகளும் இணைந்து, அடுத்த வாரம் சிங்கப்பூரில் மெட்டா (Meta), கூகுள் (Google), மற்றும் 'X' ஆகிய மூன்று சமூக ஊடக ஜாம்பவான்களுடன் சந்திப்பை நடத்த உள்ளன.
மின்னணு வாடிக்கையாளர் சரிபார்ப்பு செயல்முறையான eKYC-ஐ (electronic Know Your Customer) நடைமுறைப்படுத்துவதற்கான சிறந்த வழிமுறைகளைப் பற்றி விவாதிப்பதே இந்தச் சந்திப்பின் முக்கிய நோக்கம் என்று தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
மை கார்டு, கடவுச்சீட்டு மற்றும் மை டிஜிட்டல் ஐடி போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்களை பயன்படுத்தி eKYC-ஐ செயல்படுத்துவது, தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2010 உடன் ஒத்துப்போகும் வகையில் தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.
தரவுப் பாதுகாப்பு தவிர, 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் அச்சுறுத்தல் போன்ற இணைய அபாயங்களில் இருந்து பாதுகாப்பதற்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளிக்கிறது.
சிறுவர்களின் சமூக ஊடக அணுகலைக் கட்டுப்படுத்த eKYC செயல்முறை மிகவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டத்தின் (பிரிவு 233) கீழ் "விரும்பத்தகாத வார்த்தைகள்" தொடர்பான ஏற்பாடு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அண்மையில் வழங்கப்பட்ட மேல் முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு குறித்தும் ஃபஹ்மி ஃபட்சில் கருத்துத் தெரிவித்தார்.
அரசாங்கம் அத்தீர்ப்பை மதிப்பதாகக் கூறிய அவர், எனினும் சட்ட அட்டர்னி ஜெனரலின் ஆலோசனைப்படி, மத்திய நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே அனைவரும் நீதித்துறை நடைமுறையை மதித்து ஊகங்களை தவிர்க்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.




