ஜோர்ஜ் டவுன், அக் 28 - பினாங்கு இந்து இயக்கமும் பினாங்கு கல்வித் துறையும் இணைந்து ஏற்பாடு செய்த எஸ்.பி.எம் தமிழ் இலக்கியப் பணிமனை பட்டறை 2025, கடந்த அக்டோபர் 25, 2025 (சனிக்கிழமை) அன்று வெற்றிகரமாக நடைபெற்றது.
காலை 8.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெற்ற இந்தப் பட்டறையில், 22 பள்ளிகளைச் சேர்ந்த 120 ஐந்தாம் படிவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவிற்கு தலைமை தாங்கிய பினாங்கு இந்து இயக்கத் தலைவர் டத்தோ பி. முருகையா, மாணவர்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்வது மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார்.
மேலும், கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தமிழ் இலக்கியத் தேர்வில் பினாங்கு மாநிலம் 98% தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு கல்வி துறையுடன் இணைந்து 100% தேர்ச்சி இலக்கை அடைவதற்காக ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் இயக்கம் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அறிவித்தார்.
பினாங்கு கல்வித்துறையின் தமிழ் மொழிப் பிரிவின் துணை இயக்குநர் திரு. லோகநாதன் உரையாற்றுகையில், இந் நிகழ்ச்சிக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து தமிழ் கல்வி வளர்ச்சிக்குப் பங்களிக்கும் பினாங்கு இந்து இயக்கத்திற்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மாணவர்களுக்குப் பெரும் பயனளித்த இத்தகைய பணிப் பட்டறைகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும், இது தமிழ் மொழியை ஊக்குவிக்க ஒரு சிறந்த தளமாக அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




