கோலாலம்பூர், அக் 28: பள்ளிகளில் உளவியல் ஆதரவு மற்றும் ஆலோசனைகளை வலுப்படுத்தும் நோக்கில், மலேசியக் கல்வி அமைச்சு அடுத்த ஆண்டு முதல் ஆசிரியர்களுக்கு ஆரம்ப உளவியல் உதவி (PFA) பயிற்சியை வழங்கத் திட்டமிட்டுள்ளது என அதன் துணை அமைச்சர் வோங் கா வோ அறிவித்தார்.
இந்தப் பயிற்சி, சுகாதார அமைச்சுடன் இணைந்து மாநிலக் கல்வித் துறைகள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்படும்.
பகடிவதையில் ஈடுப்பட்டவர்களா அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்களாக என மாணவர்களிடையே காணப்படும் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவதில் கட்டொழுங்கு ஆசிரியர்கள் மற்றும் விடுதிக் காப்பாளர் ஆசிரியர்களின் பங்கை அங்கீகரிப்பதாக மக்களவையில் நடைபெற்ற கேள்வி-பதில் அமர்வின் போது வோங் தெரிவித்தார்.
மேலும், கல்வி அமைச்சு மாணவர்களிடையே மனநலப் பரிசோதனை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன் மூலம், ஐந்தாம், ஆறாம் வகுப்பு மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிந்து, குறிப்பிட்ட மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஆசிரியர்களுக்கு அடிப்படை உளவியல் மற்றும் ஆலோசனையைப் பற்றி எடுத்துரைக்கும் பொதுச் சேவை வழிகாட்டி நண்பர்கள் (AKRAB) திட்டமும் வலுப்படுத்தப்படுகிறது. கடந்த 2024ஆம் ஆண்டு நிலவரப்படி, 500 தலைமை ஆசிரியர்கள் AKRAB ஆக அங்கீகாரம் பெற்றுள்ளனர்.
தலைமை ஆசிரியர்கள், விடுதிக் காப்பாளர்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் விரிவான உளவியல் மற்றும் ஆலோசனைப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான திட்ட முன்மொழிவையும் கல்வி அமைச்சு சமர்ப்பித்துள்ளது.
ஆசிரியர்கள் பெற்றோர்களை போல் பங்கு வகித்து மாணவர்களின் உணர்ச்சி, ஆன்மீகம், ஆளுமை மற்றும் கல்வி அம்சங்களில் கவனம் செலுத்தும் விடுதிக் குடும்ப அமைப்பு (SisKA) திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.




