ஜமைக்கா, அக் 28 - மெலிசா புயலை எதிர்கொள்ள ஜமைக்கா மற்றும் அதன் அண்டை நாடுகள் தயார்நிலை பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான புயலாக, மெலிசா புயல் உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால், பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைய வேண்டும் என்று வானிலை ஆய்வாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
கடந்த 1988ஆம் ஆண்டு ஜமைக்காவில் 40க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கில்பெட் புயலை விட, மெலிசா புயல் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கிங்ஸ்டனில் உள்ள அனைத்துலக விமான நிலையம் சனிக்கிழமை மூடப்பட்ட நிலையில் அனைத்து துறைமுகங்களும் மூடப்பட்டன.
முன்னதாக ஹய்டி மற்றும் டொமினிகன் குடியரசில் வீசிய மெலிசா புயலினால் குறைந்தது நால்வர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதுமட்டுமில்லாமல், அங்கு கனமழை மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.
மணிக்கு ஏழு கிலோமீட்டர் வேகத்தில் மெலிசா புயல் வேகமாக நகர்வதாகவும், புயல் கடந்து செல்லும் பகுதிகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
பெர்னாமா




