கோலாலம்பூர், அக் 27 — இன்று அமெரிக்கா அதிபர் டோனல்ட் டிரம்ப் தோக்கியோவுக்கு புறப்பட்டார். அவர் ஜப்பான் மன்னர் நருஹித்தோ மற்றும் புதிய பிரதமர் சனாயே தாக்காய்ச்சி ஆகியோரை சந்திக்கவுள்ளார். இந்தப் பயணம், வர்த்தக ஒப்பந்தங்கள், முதலீடு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
முதலில், டிரம்ப்மலேசியாவிற்கு வருகை புரிந்தார். அங்கு அவர் தென்கிழக்காசிய நாடுகளுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். மேலும், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் அவர் மேற்பார்வையிட்டார்.
இந்தப் பயணம் அக்டோபர் 30 அன்று தென் கொரியாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்குடன் நடைபெறும் உச்சிமாநாட்டுடன் முடிவடையும்.
உலகின் பெரிய இரண்டு பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா, புதிய வர்த்தகப் போரைத் தவிர்க்கும் நோக்கில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
அமெரிக்காவுடன் பொருளாதார உறவை வலுப்படுத்த ஜப்பான் ஆர்வமாக உள்ளது. அதற்காகக் கடுமையான இறக்குமதி வரிகளிலிருந்து தளர்வு பெறுவதற்காக அமெரிக்காவுக்கு 550 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் RM2.31 டிரில்லியன்) முதலீடு செய்ய ஜப்பான் உறுதியளித்துள்ளது.
அமெரிக்காவுடன் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், அமெரிக்க பிக்கப் டிரக்குகள், சோயா பீன்ஸ் மற்றும் எரிவாயுவை வாங்குவதாகப் பிரதமர் சனாயே தாக்காய்ச்சி வாக்குறுதி அளிக்க உள்ளார்.
“மலேசியா ஒரு அற்புதமான நாடு. முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்களிலும், தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான அமைதி ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டோம். இனி போர் இல்லை! கோடிக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இப்போது ஜப்பானுக்குப் புறப்படுகிறேன்!” என்று டிரம்ப் தனது சமூகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த ஆசியப் பயணம், அமெரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கிடையேயான புதிய ஒத்துழைப்பை உருவாக்கும் முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ஜப்பான் மற்றும் சீனாவுடனான அவரது சந்திப்புகள், உலக வர்த்தகத்திலும் அரசியலிலும் புதிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.




