கோலாலம்பூர், அக் 27 – பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் மரங்கள் விழும் அபாயத்தை குறைப்பதற்காக மொத்தம் 53,822 மரங்களை வெட்டும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்தது.
பராமரிப்பு ஒப்பந்ததாரர்களின் மூலம் நியமிக்கப்பட்ட 22 தகுதியான மர நிபுணர்கள் (அர்போரிஸ்ட்) உடனான ஒத்துழைப்பின் மூலம், கூட்டரசு பிரதேசமான கோலாலம்பூர் முழுவதும் மரங்களுக்கான கவனிப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் கவனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன என டிபிகேஎல் தெரிவித்தது.
இது, சமீபத்தில் ஏற்பட்டுவரும் புயல் மற்றும் கனமழை நிலைமைகளை எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும்.
“சமீபகாலமாக ஏற்பட்டு வரும் புயல் மற்றும் கனமழை நிலைமைகளுக்கு எதிராக, டிபிகேஎல் எப்போதும் பாதுகாப்பு மற்றும் தயார்நிலை அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
“மேலும், மேனாரா டிபிகேஎல் 1 கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் செயல்படும் அதன் பொது நிகழ்வு கட்டுப்பாட்டு அறை (Bilik Gerakan Insiden Awam) கோலாலம்பூர் முழுவதும் நிகழும் சம்பவங்களை கண்காணிக்கவும், தகவல்களை ஒருங்கிணைக்கவும் முக்கிய மையமாக செயல்படுகிறது,” என தெரிவிக்கப்பட்டது.




