ஷா ஆலம், அக் 27 – சட்டவிரோதமாகக் குப்பை கொட்டும் நடவடிக்கையில் ஈடுப்பட்ட நபருக்கு எதிராக பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) நான்கு அபராதங்களை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுமக்களின் தகவல் மற்றும் அதிகாரிகளின் கண்காணிப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது.
பெட்டாலிங் ஜெயாவின் ஜாலான் 18/5 மற்றும் ஜாலான் 18/9 பகுதிகளில் பெட்டிகள், கட்டிடக் கழிவுகள் மற்றும் தோட்டக் குப்பைகள் பொறுப்பில்லாமல் கொட்டப்பட்டிருந்தன என எம்பிபிஜே தெரிவித்தது. இது சுற்றுப்புறச் சூழலை மாசுபடுத்தியதாகக் கூறப்பட்டது.
2007ஆம் ஆண்டின் குப்பை சேகரிப்பு, கொட்டுதல் மற்றும் அகற்றுதல் குறித்த சிறப்பு சட்டத்தின் (எம்பிபிஜே) கீழ் அபராதம் வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சட்டத்தின் கீழ், ஒவ்வொரு குற்றத்திற்கும் அதிகபட்சமாக ஆயிரம் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
நகரத்தின் சுத்தமும் நலனும் பாதுகாக்கப்படும் வகையில் இந்த சட்ட அமலாக்க நடவடிக்கைகள் தொடரும் என்று எம்பிபிஜே தெரிவித்தது.
பொதுமக்கள் விதிமுறைகளைப் பின்பற்றி, குப்பையை குறிப்பிடப்பட்ட இடங்களில் மட்டுமே கொட்டுமாறு நினைவூட்டப்பட்டுள்ளனர்.




