ஜொகூர் பாரு, அக் 27: புலனம் செயலி வாயிலாக தனது கணவனை போல் நடித்து அனுப்பப்பட்ட செய்தியை நம்பி மழலையர் பள்ளி ஆசிரியை RM100,000 இழந்தார்.
52 வயதான அந்தப் பெண்ணிடம், தன் வங்கிக் கணக்கைப் பயன்படுத்த முடியாத நிலை என்று கூறி வணிகச் செயல்பாடுகளுக்காக பணம் கடன் தருமாறு கணவன் கேட்டதாக ஜொகூர் பாரு தெற்கு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ரவூப் செலாமாட் தெரிவித்தார்.
எந்த சந்தேகமும் இல்லாமல், பாதிக்கப்பட்டவர் கடந்த வெள்ளிக்கிழமை மூன்று வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ஏழு முறை பணம் பரிமாற்றம் செய்துள்ளார் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார். பணம் அனுப்பிய பிறகு, தற்போது ஒரு வார வேலை தொடர்பாக சீனாவில் இருக்கும் தனது கணவனைத் தொடர்பு கொண்டபோது, அவரது புலனம் எண் ஹேக் செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. அதன் பின்னர் தான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, நேற்று போலீசில் புகார் செய்தார்.




