சிரம்பான், அக் 27 — தற்போது நெகிரி செம்பிலான் மாநிலத்தில் இன்ஃப்ளூயன்சா (காய்ச்சல்) நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது மற்றும் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் அதை தொடர்ந்து நெருக்கமாகக் கண்காணித்து வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹாரூன் தெரிவித்தார்.
சில பள்ளிகளில் காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியிருந்தாலும், நிலைமை இன்னும் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே, தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவது போன்ற கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.
“பெற்றோர், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் அவர்களின் உடல்நிலை நன்றாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதே சமயம், அதிக ஆபத்துக்குள்ளாகும் மூத்த குடிமக்கள் அரசு சுகாதார நிலையங்களில் இலவசமாக இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி பெறலாம்,” என 2025ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் சீருடை அமைப்புகளின் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
சிலாங்கூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட முயற்சியைப் போல், மாணவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா ஏ தடுப்பூசி வழங்கும் திட்டம் மாநிலத்தில் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் இதனை விளக்கமாக கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் அக்டோபர் 5 முதல் 11 வரை, 41-வது தொற்றுநோய் வாரத்தில் 299 இன்ஃப்ளூயன்சா சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் இதற்கு முந்தைய வாரத்தில் 154 சம்பவங்கள் மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.




