ஜித்ரா, அக் 26 – நாட்டின் எல்லைப்பகுதியில் கடத்தல்காரர்களுக்கு உதவும் எந்தவொரு குடிமக்களுக்கும் போலீஸ் சமரசம் செய்யாது எனவும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.
எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் சட்டவிரோத பொருட்கள் கடத்தல் தொடர்பான தகவலை அதிகாரிகளுக்கு தெரிவித்து, குற்றச்செயல்களை தடுக்கும் பணியில் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
விசாரணையில் எல்லைப்பகுதி குடிமக்கள் சம்பந்தப்பட்டதாக நிரூபிக்கப்பட்டால் நாங்கள் எந்த சமரசமும் செய்யமாட்டோம், அவர்களை கைது செய்வோம் என்றார். ஆகையால், எல்லைப்பகுதி மக்கள் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கி சட்டத்தைக் கடைபிடிக்க வேண்டும். ஏதேனும் தகவல் இருந்தால் எங்களுக்கு தெரிவிக்கலாம்.
மேலும் நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து நுழைவாயில்களிலும், குறிப்பாக புக்கிட் காயு ஹிதம் மற்றும் கோத்தா புத்ரா குடிவரவு, சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு (ICQS) வளாகங்களில் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு வலுப்படுத்தப்படும்.
கிளாந்தானில் சட்டவிரோத துறைமுகங்கள் இடிக்கப்பட்டதால், மேலும் KLIA-வில் எல்லைக் காவல் மற்றும் பாதுகாப்பு முகமை கடுமையான கண்காணிப்பை மேற்கொள்வதால், குற்றவாளிகள் கெடா மாநிலத்தில் உள்ள இரண்டு நுழைவாயில்களை மாற்று வழியாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது. அதனால், புக்கிட் காயு ஹிதம் மற்றும் கோத்தா புத்ரா போன்ற முக்கிய நுழைவாயில்கள் கடத்தல்காரர்களின் மாற்று பாதையாக மாறாது என்பதைக் உறுதி செய்ய விரும்புவதாக அவர் கூறினார்.




