கோத்தா பாரு, அக் 26: இயற்கை வளங்கள் மற்றும் சூழல் நிலைத்தன்மை அமைச்சு (NRES) மலேசியாவின் 2018-2030 ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லா திட்டத்தை வலுப்படுத்தி வருகிறது. இத்திட்டம், பிளாஸ்டிக் மாசுபாட்டை படிப்படியாகக் குறைக்கும் நோக்கில் நாட்டின் மூலோபாய வழிகாட்டுதலாக செயல்படுகிறது.
இத்திட்டம் சமூகத்தில் பிளாஸ்டிக்கின் மீதான அணுகுமுறையை மாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது என்று அமைச்சகத்தின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் சிங் து கிம் தெரிவித்தார்ர். அதிகப்படியான பயன்பாட்டிலிருந்து மறுசுழற்சி மற்றும் மீண்டும் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்ட நிலைத்தன்மை நோக்காக மாற வேண்டும் எனக் கூறினார்.
மேலும் இந்தக் கொள்கை அமைப்பின் மூலம் மக்கள் சுற்றுச்சூழலை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் புதிய பொருளாதார வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்று அவர் கூறினார்.
“எனவே, அரசு, தொழில் துறை மற்றும் சமூகம் அனைத்தும் இணைந்து 2030 ஆம் ஆண்டுக்குள் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் இல்லா இலக்கை அடையச் செயல்பட வேண்டும்,” என அவர் நேற்றிரவு நடைபெற்ற 2025 தேசிய சுற்றுச்சூழல் தினம் தொடக்க விழாவில் உரையாற்றிய பொது அவர் இவ்வாறு கூறினார்.
மின்சாதனக் கழிவுகள் (e-waste) பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட மறுசுழற்சி முறையின் மூலம், அரசு பயன்படுத்தப்பட்ட மின்சாதனங்களிலிருந்து தாமிரம், தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள கூறுகளை மீட்டெடுக்க ஊக்குவிக்கிறது.
இந்த முயற்சி புதிய இயற்கை வளங்களின் மீதான நம்பிக்கையை குறைப்பதோடு மட்டுமல்லாமல், மறுசுழற்சி தொழில்நுட்பம் மற்றும் மீட்பு துறையில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குகிறது என்றார்.
இதற்கிடையில், கிளந்தான் அரசின் முயற்சிகளை பாராட்டி, மாநிலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக RM27.5 மில்லியன் ஒதுக்கி பல்வேறு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு திட்டங்களை மேற்கொள்வதாக தெரிவித்தார்.




