கோலாலம்பூர், அக் 26 — தாய்லாந்து இன்று கம்போடியாவுடன் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, தடுத்து வைக்கப்பட்டிருந்த கம்போடியாவின் 18 இராணுவ வீரர்களை விடுவிக்க உள்ளது. இந்த நடவடிக்கை, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான எல்லைப் பகுதிகளில் நிலைத்தன்மை மற்றும் நம்பிக்கையை மீண்டும் உருவாக்கும் முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
இன்று கோலாலம்பூரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, இரு தரப்பும் அமைதி, சுயாட்சி மற்றும் பரஸ்பர மரியாதைக்கான தங்களின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சார்ன்விரகுல் தெரிவித்தார்.
இரு நாடுகளும் உடனடியாக எல்லைப் பகுதிகளில் இருந்து கனரக ஆயுதங்களைப் பிறழ்த்துவதோடு, அப்பகுதி மக்களுக்குள் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளைத் தொடங்கும் என ஒப்பந்தத்தின் கீழ் அவர் கூறினார்.
“இன்று தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்படுகிறது. நாங்கள் உண்மையான அமைதியின் பாதையில் முன்னேறுகிறோம்,” என்று அவர் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டு கையெழுத்து விழாவில் உரையாற்றினார்.
அமைதி ஒப்பந்தத்தின் முழுமையான செயலாக்கம், நிலையான அமைதிக்கான அடித்தளமாக இருக்கும் என்று அனுடின் வலியுறுத்தினார்.“அதிலும் முக்கியமாக, இது நமது உறவுகளை மீட்டெடுக்கும் செயல்முறையைத் தொடங்குகிறது. எல்லைப் பகுதிகளில் உள்ள சமூகங்கள் மோதலால் பிரிக்கப்பட்டுள்ளன, மற்றும் நிரபராத மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் மிகப்பெரிய பொறுப்பை அளிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.




