ஜோகூர் பாரு, அக். 26 – சிம்பாங் ரெங்காம் அருகே நேற்று மாலை நடைபெற்ற மூன்று வாகனங்கள் தொடர்பான விபத்தில், ஒரு தாய் மற்றும் மகன் உயிரிழந்த வேளை மூவர் காயமடைந்தனர்.
மாலை சுமார் 5.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெரோடுவா கன்சில் கார், மாஸ்டர் தொழிற்சாலை வேன் மற்றும் தோயோத்தா ஹைலக்ஸ் (4x4) வாகனம் சம்பந்தப்பட்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி ஏசிபி பஹ்ரின் முகமது நோ தெரிவித்தார்.
பெரோடுவா கன்சில் காரின் பெண் ஓட்டுநரும், முன் இருக்கையில் இருந்த அவரது 15 வயது மகனும் தலையிலும் உடலிலும் ஏற்பட்ட கடுமையான காயங்களால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்புறம் இருந்த 9 வயது மகன் தலை மற்றும் இடது காலில் கடுமையாக காயமடைந்தார்.
அனைத்து காயமடைந்தவர்கள் குளுவாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். மேலும் மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறை (JBPM) நேற்று வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்கள் 51 வயதான ருலிஜா அஹ்மத் மற்றும் 15 வயதான சலாம் நோராஸ்லி என அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




