ஷா ஆலம், அக் 25 — எதிர்வரும் 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகள் (OKU) சமூகத்திற்கான உதவித் தொழில்நுட்ப மேம்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று சிலாங்கூர் இன்சான் இஸ்திமேவா அறக்கட்டளை (யானிஸ்) எதிர்பார்க்கிறது.
அதன் உதவித் தொழில்நுட்பம் மாற்றுத்திறனாளிகளை வெறும் உதவிபெறும் நபர்களாக அல்லாமல், சமூகத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பங்களிக்கக்கூடியவர்களாக மாற்ற உதவும் என யானிஸ் தலைமை செயல் அதிகாரி ஏஆர். கமாருல் ஹிஷாம் கூறினார்.
மாநில அரசின் ஆதரவுடன் மாற்றுத்திறனாளிகள் மாநில வளர்ச்சியின் ஒரு முக்கிய பங்களிப்பாளர்களாகப் பார்க்கப்பட வேண்டும்.
உதவித் தொழில்நுட்ப வளர்ச்சி புதிய வேலைவாய்ப்புகளையும் புதிய கண்டுபிடிப்புகளையும் உருவாக்கும் திறன் கொண்டது.
ஷா ஆலாமில் உள்ள Aeon மாலில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான எதிர்கால சர்வதேச உச்சிமாநாடு (ISDIF) நிகழ்வில் கமாருல் இதை கூறினார்.
சமூக நவீனாக்கம் (social innovation) மற்றும் உதவித் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக (R&D) சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்றார் அவர்.
அதே நேரத்தில், மாநில அரசின் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ளூர் சமூகமும் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தனியார் நிறுவனங்களும் தங்களது சமூகப் பொறுப்பு (CSR) திட்டங்கள் மூலம் மாற்றுத்திறனாளி நட்பு சூழலை உருவாக்க செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
“அனைவரும் இணைந்து செயல்பட்டால், மாற்றுத்திறனாளிகளுக்கான நட்பு சமூகத்தை உருவாக்க முடியும்,” என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.




