கோலாலம்பூர், அக் 24: இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 17 முதல் 21 வரை நாடு முழுவதும் “ஓப் லன்சார்” (Op Lancar) சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நடவடிக்கையின் போது உயிரிழப்புகள் 9.8 சதவீதம் குறைந்துள்ளதாகப் புகிட் அமான் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்துள்ளார்.
சாலை விபத்துகள் கடந்த ஆண்டை விட 5.2 சதவீதம் அதிகரித்துள்ளன. அதாவது கடந்த ஆண்டு 8,408 விபத்துகள் பதிவாகியிருந்த நிலையில், இந்த ஆண்டு 8,940 சம்பவங்கள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், மரண விபத்துகள் மற்றும் உயிரிழப்புகள் முறையே 9.8 சதவீதம் மற்றும் 12 சதவீதமாகக் குறைந்துள்ளன என யூஸ்ரி ஹாசன் விளக்கினார்.
இந்த ஆண்டு மொத்தம் 82 மரண விபத்துகள் பதிவாகியுள்ள வேளையில் கடந்த ஆண்டு 90 சம்பவங்கள் பதிவாகியிருந்தன. அதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 85 ஆகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டின் 96 பேருடன் ஒப்பிடும் போது குறைவாகும்.
“மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பின்புறம் பயணிப்பவர்கள் இன்னும் உயிரிழப்புகளில் மிகப்பெரிய பங்கை வகிக்கின்றனர். இந்த ஆண்டு 61 பேர் (72 சதவீதம்) உயிரிழந்துள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20 சதவீத (76 மரணம்) குறைவாகும்,” என்று அவர் கூறினார்.
இவ்வாண்டு சோதனை நடவடிக்கையின் போது மொத்தம் 43,379 சமன்கள் வழங்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் 52,090 சமன்களை ஒப்பிடும் போது 8,711 குறைவாகும்.
“உயிரிழப்புகள் மற்றும் சமன் வழங்கப்பட்ட எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவின் அடிப்படையில், சாலைப் பயனாளர்களிடையே போக்குவரத்து விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் மீது உள்ள விழிப்புணர்வு அதிகரித்துள்ளது எனக் யூஸ்ரி கூறினார்.




