ஷா ஆலாம், அக் 24: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) தனது நிர்வாகப் பகுதிக்குள் உள்ள அனைத்து பார்க்கிங் இடங்களிலும் கட்டண வசூல் முறையை அமல்படுத்த முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை நகராண்மை கழகத்தின் வருவாயை உயர்த்துவதோடு, பார்க்கிங் இடங்களை தவறாகப் பயன்படுத்துவதையும் கட்டுப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ளது.
The Star நாளிதழுக்கு அளித்த பேட்டியில், இந்த நடவடிக்கை ஒரு விரிவான உள்துறை ஆய்வின் முடிவாக எடுக்கப்பட்டதாக எம்பிஏஜே துணைத் தலைவர் ஹஸ்ரோல்நிசாம் ஷாரி கூறினார். ஆய்வு ஒன்றில் நகரத்தின் சில பகுதிகளில் இதுவரை பார்க்கிங் கட்டண முறை அமல்படுத்தப்படாததும், சில பார்க்கிங் இடங்களில் நீண்டகாலமாக வாகனங்கள் விட்டு செல்லப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.
“இந்த நடவடிக்கை வருவாயை மேம்படுத்துவதுடன், சிலர் தங்கள் வாகனங்களை பார்க்கிங் இடங்களில் நீண்ட நாட்கள் விட்டு செல்வதைத் தடுக்கவும் உதவும்,” என்று ஹஸ்ரோல்நிசாம் கூறினார்.
தற்போது எம்பிஏஜே சுமார் 60 பார்க்கிங் பகுதிகளை, மொத்தம் 17,500 பார்க்கிங் இடங்களுடன் பராமரித்து வருகிறது. வாகன ஓட்டிகள் கட்டண விதிகளைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்காகக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்த நகராண்மை கழகம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பார்க்கிங் மேலாண்மை மேலும் ஒழுங்குபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அக்டோபர் 16 ஆம் தேதிவரை, எம்பிஏஜே மொத்தம் RM7 மில்லியன் பார்க்கிங் கட்டணங்களை வசூலித்துள்ளது.
இதில் RM3.23 மில்லியன் முன்பதிவு செய்யப்பட்ட பார்க்கிங் இடங்களிலிருந்து, RM202,000 மாதச்சீட்டுகளிலிருந்து, RM271,000 குடியிருப்பு அனுமதி சீட்டுகளிலிருந்து மற்றும் RM3.3 மில்லியன் இணைய வசூல்களிலிருந்து பெறப்பட்டுள்ளது. வசூலிக்கப்பட்ட மொத்த தொகையில் RM3.6 மில்லியன் “ஸ்மார்ட் சிலாங்கூர் டெலிவரி யூனிட்டுக்கு” செலுத்தப்பட்டுள்ளது.




