புது டெல்லி, அக் 24 - தீபாவளிப் பண்டிகைக்கு வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் இந்தியாவின் தலைநகரான புது டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிப் பண்டிகைக்குப் பிறகு அங்கு காற்றுத் தூய்மைகேடு அபாயகரமான அளவை எட்டுவது தொடர்கதையாகி வருகிறது.
அண்டை மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிக்கப்படுவது மற்றும் தீபாவளி காலத்தில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் புகைமண்டலம் குளிர்காலப் பனியுடன் சேர்ந்து புது டெல்லியை முற்றுகையிடுவது வாடிக்கையாக உள்ளது.
இதைக் கட்டுப்படுத்த நீதிமன்றங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதிப்பது வழக்கமான நடவடிக்கையாகும்.
இந்த ஆண்டும் தீபாவளிக்கு முன்னதாகவே (கடந்த ஞாயிற்றுக்கிழமை) டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று தூய்மைக் கேட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டத்தை ஆணையம் அமல்படுத்தியிருந்தது.
இருப்பினும் நீதிமன்றத் தடைகளையும் மீறி தீபாவளி இரவில் டெல்லி முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் தலைநகரின் காற்றின் தரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள 38 காற்றுத் தரக் கண்காணிப்பு மையங்களில் 34 மையங்கள் 'சிவப்பு மண்டல' அளவைப் பதிவு செய்தன.
நேற்று நகரின் 24 மணி நேர சராசரி காற்றின் தரக் குறியீடு 345 ஆக அதிகரித்து 'மிக மோசம்' என்ற பிரிவில் நீடித்தது.
-- பெர்னாமா




