பட்டர்வொர்த், அக் 23: சட்டப்படி அனுமதி இன்றி மொத்தம் 7,737 லிட்டர் டீசலை வைத்திருந்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்ட லாரி ஓட்டுநர் ஒருவருக்கு, நீதிமன்றம் இன்று RM30,000 அபராதம் விதித்தது.
அபராதம் செலுத்தத் தவறினால் குற்றவாளிக்கு 12 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிபதி ரொஸ்லான் ஹமீத், உத்தரவிட்டார்.
2023 ஜூலை 7 அன்று புக்கிட் மெர்தாஜாம் பகுதியில் சாலையோரத்தில் ஒரு வாகனத்தில் கூடுதல் எரிபொருள் தொட்டியில் சட்டவிரோதமாக 2,230 லிட்டர் டீசல், பம்ப், குழாய் மற்றும் இரும்பு தொட்டி போன்ற உபகரணங்களுடன் எரிபொருள் மாற்றும் செயல்பாட்டுக்காக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.
மேலும், 2024 ஏப்ரல் 25 அன்று அதே வாகனத்தைப் பயன்படுத்தி புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் 5,507 லிட்டர் டீசலை பம்ப் மற்றும் குழாய்கள் வைத்திருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார்.
முன்னதாக, வழக்கறிஞர் இன்றி தன்னைத் தானே வழிநடத்திய குற்றவாளி, வேலை செய்யாத மனைவி, மூன்று குழந்தைகள் மற்றும் வயதான மாமியாரை பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் குறைந்தபட்ச அபராதம் விதிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் வேண்டுகோள் விடுத்தார். நீதிபதி ரொஸ்லான், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள், வாகனம், ஜாமீன் தொகை மற்றும் விசாரணை சான்றுகள் ஆகியவை அரசின் சொத்தாக மாற்றப்படவோ அல்லது அழிக்கப்படவோ வேண்டும் என்று உத்தரவிட்டார்.




