கோலாலம்பூர், அக் 23- 47வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, மலேசிய போலீஸ் படை பொதுமக்கள் தலைநகரத்திற்குள் வருவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மாநாடு இந்த அக்டோபர் மாதம் 26 முதல் 28 வரை நடைபெறும்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் மாநாட்டிற்கு செல்லும் வழிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதவாறு சில சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டு, மாற்று வழிகள் அமைக்கப்படவுள்ளன என்று போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.
சாலை மூடல் நடவடிக்கை அக்டோபர் 17ஆம் தேதி முதல் கட்ட கட்டமாக தொடங்கப்பட்டு, மாநாடு நடைபெறும் நாட்களில் குறிப்பாக அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் நடைபெறும் நேரங்களில் முழுமையாக அமல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
எனவே, பொதுமக்கள் நகர மையப்பகுதிக்குள் வருவதைத் தவிர்க்கவும், பயணத்தைக் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் திட்டமிடவும், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்படுகிறார்கள். மாநாடு நடைபெறும் காலத்தில் போக்குவரத்து சீராக இயங்குவதற்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், மாநாடு நடைபெறும் காலத்தில் அமைதியை குலைக்கும் எந்த முயற்சிக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார். அதேசமயம், மக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் சுற்றுப்புற சூழல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும், சந்தேகமான எந்த நடவடிக்கையும் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.




