கோலாலம்பூர், அக் 23: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மஸ்ஜித் இந்தியா சாலையில் ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவம், சிதைந்து போன கழிவு நீர் குழாய் அமைப்பின் தோல்வி மற்றும் மண் நிலைத்தன்மையின்மை காரணமாக ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது.
கோலாலம்பூர் மாநகராட்சி தலைமையிலான சிறப்பு குழு இந்தச் சம்பவம் பொதுமக்கள் அஞ்சியபடி நிலத்தடியில் உள்ள சுண்ணாம்புக் கல் அடுக்குகளால் ஏற்படவில்லை என பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் சலிஹா முஸ்தாஃபா தெரிவித்தார்.
சம்பவ இடம் கென்னி ஹில்ஸ் அமைப்பின் (Formasi Kenny Hills) மீது அமைந்துள்ளது. இதன் அடிப்படை பகுதி ‘ஷைஸ்டு’ (syis) எனப்படும் பாறை. சுண்ணாம்புக் கல் அடுக்கு 60 முதல் 70 மீட்டர் ஆழத்தில் மட்டுமே காணப்பட்டது. எனவே, இந்தச் சம்பவம் நேரடியாக சுண்ணாம்புக் கல்லுடன் தொடர்பில்லை,” என்று அவர் கூறினார்.
“கழிவு நீர் குழாய் அமைப்பு இரசாயன எதிர்வினை காரணமாக சிதைந்ததுடன், மண் நிலைத் தடுமாற்றமும் சேர்ந்து, நடைபாதையின் கீழ் வெற்றிடத்தை உருவாக்கியது. இதுவே பின்னர் நில அமிழ்வுக்கு காரணமானது,” என்று இன்று மக்களவையில் கேள்வி-பதில் அமர்வில் தெரிவித்தார்.
மேலும் அரசு தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஜியோடெக்னிக்கல் கண்காணிப்பு அடிப்படையிலான எச்சரிக்கை முறைமையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பை பரிசீலித்து வருவதாக அவர் தெரிவித்தார். இந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடந்தால் வேகமான மற்றும் பயனுள்ள நடவடிக்கை எடுக்க, அரசு வலுவான அவசர நடவடிக்கை குழுவை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.




