அலோர் ஸ்டார், அக் 23: லங்காவி செனாங் கடற்கரையில் நேற்று இரு ஆடவர்கள் மூழ்கி உயிரிழந்தனர்.
நேற்று மாலை 6.05 மணியளவில் லங்காவி மாவட்ட போலீஸ் தலைமையகம் கடற்கரையில் இரண்டு உள்ளூர் ஆடவர்கள் மூழ்கியதாக தகவல் பெற்றதாக லங்காவி மாவட்ட துணை போலீஸ் தலைமை அதிகாரி சுப்ரிண்டெண்ட் சம்சுல்முத்தீன் சுலைமான் தெரிவித்தார்.
38 மற்றும் 46 வயதுடைய அவ்விருவரும் சிலாங்கூரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் குடும்பத்தினருடன் லங்காவிக்கு சுற்றுலா வந்திருந்ததாக கூறப்பட்டது. மூழ்கிய இருவரும் பொதுமக்களின் உதவியுடன் மற்றும் ஜெட் ஸ்கி மூலம் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறினார்.
மேலும் அவ்விருவரும் லங்காவியில் உள்ள சுல்தானா மலிஹா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவசர சிகிச்சை பிரிவில் பரிசோதனை செய்யப்பட்டதில் அவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்திருந்தது உறுதிசெய்யப்பட்டது.
இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.




