ஷா ஆலம், அக்டோபர் 22 — சாலைப் போக்குவரத்து துறை வழங்கும் சமன்களுக்கும், தானியங்கி விழிப்புணர்வு பாதுகாப்பு அமைப்பு (AwAS) மூலம் கண்டறியப்பட்ட குற்றங்கள் உட்பட, 50 சதவீத தள்ளுபடி நவம்பர் 1 முதல் டிசம்பர் 31 வரை தொடர்கிறது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் இதே தள்ளுபடி வழங்கப்பட்டபோது ஏற்கனவே சமன்களை செலுத்தியவர்களுக்கு நியாயம் வழங்குவதற்காக 50 சதவீத தள்ளுபடியைத் தொடர தீர்மானிக்கப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்து துறை ஆண்டு தொடக்கத்திலிருந்தே AwAS சமன்கள் மற்றும் பிரிவு 22 கீழ் உள்ள சமன்களுக்கு 50 சதவீத குறைப்பை வழங்கி வருகிறது. தள்ளுபடி விகிதத்தை 70 சதவீதமாக உயர்த்தினால், ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு அது அநியாயமாகும் என்று இன்று நாடாளுமன்றத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.
அக்டோபர் 21 வரை, JPJ மொத்தம் 14 லட்சம் AwAS சமன்களைத் தீர்த்து, RM425 மில்லியன் வசூல் செய்துள்ளது. இது பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்று வரும் அதே வேளையில் சிலர் தள்ளுபடி சலுகைக்காக கட்டணத்தை ஒத்திவைத்தி வருவதாக அவர் கூறினார்.




