கோலாலம்பூர், அக் 22 — அக்டோபர் 24 முதல் 26 வரை சிப்பாங் இ்ன்டர்நேஷனல் சர்க்யூடில் (SIC) நடைபெறும் பெட்ரோனாஸ் மலேசியா கிராண்ட் பிரிக்ஸ் 2025 நிகழ்வை முன்னிட்டு, சிப்பாங்கில் போக்குவரத்து மாற்றுப்பாதைகளை செயல்படுத்தும் என புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
இந்த மாற்றுப்பாதைகள் நிகழ்வின் போது போக்குவரத்து சீராக நடைபெறவும், சாலைப் பயணிகளின் பாதுகாப்பு உறுதி செய்யவும் நோக்கமாக கொண்டுள்ளதாக அத்துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார். இதற்காக 177 மூத்த மற்றும் இளைய போலீஸ் அதிகாரிகள் முக்கிய இடங்களில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
சிப்பாங் இன்டர்நேஷனல் சர்க்யூட்டுக்குச் (SIC) செல்ல விரும்பும் பார்வையாளர்கள், KLIA பள்ளிவாசல் சுற்றுப்பாதை வழியாக SIC வாகன நிறுத்துமிடத்துக்குச் செல்லலாம். சிப்பாங், என்ஸ்டெக், லாபு மற்றும் நீலாய் திசையிலிருந்து வரும் வாகன ஓட்டிகள் KLIA குவாட்டர்ஸ் சிக்னல் வழியாகவும் செல்ல முடியும். இதனுடன், KLIA கார்கோ சுற்றுப்பாதை வழியாக ஜாலான் பெக்கிலிலிங் திசையில் சென்று SIC வாகன நிறுத்துமிடத்தை அடையவும் முடியும் என அவர் தெரிவித்தார்.
வாகன ஓட்டிகள் முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மாற்று வழிகளைப் பயன்படுத்தி தங்களது பயணத்திட்டத்தை முன்கூட்டியே வகுத்து போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தினார்.




