ஷா ஆலம், அக் 22: வரும் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெறவுள்ள உலக நகர்ப்புற திட்டமிடல் தினம் (HPBS) 2025 மாநில அளவிலான விழாவை சிறப்பிக்க பொதுமக்கள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள்.
கோலா சிலாங்கூரில் உள்ள டத்தாரான் மலாவதியில் நடைபெறும் இந்த இரண்டு நாள் நிகழ்வில் பல சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக, அத்தியாவசிய பொருட்களை நியாயமான விலையில் விற்கும் “ஜுவாலான் எஹ்சான் ரஹ்மா” விற்பனையும் இடம்பெறும்.
மேலும், வருகையாளர்கள் இலவச சுகாதார பரிசோதனைகளிலும் பங்கேற்கலாம். இதில் உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண், பல் உள்ளிட்ட பல்வேறு சோதனைகள் இடம்பெற உள்ளன. இதன் நோக்கம் மக்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதாகும்.
விளையாட்டு ஆர்வலர்களுக்காக, அரை மாரத்தான், பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் சிறார்களுக்காக செல்லப்பிராணி பூங்காவும் இடம்பெறும். சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ' அமிருடின் ஷாரி இவ்விழாவை அதிகார பூர்வமாகத் திறந்து வைப்பார்.
