புத்ராஜெயா, அக் 22: நாட்டிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் சி.சி.டி.வி கேமராக்களை நிறுவுவதற்காக கூடுதலாக RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பை மேம்படுத்தி, விரும்பத்தகாத சம்பவங்களின் அபாயத்தை குறைப்பதற்கான அவசர நடவடிக்கையாகும்.
இந்த முயற்சி அமைச்சகத்தின் முழுமையான நடவடிக்கைத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இது கல்வி நிறுவனங்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், மாணவர் ஒழுக்கப் பிரச்சனைகளை திறம்பட சமாளிக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
“இதற்கான ஆரம்ப ஒதுக்கீடாக முன்பே அறிவிக்கப்பட்ட RM3 மில்லியனுடன் இவை இணைக்கப்படுகிறது,” என அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டின் பல்வேறு பள்ளிகளில் நவம்பர் மாதத்திலிருந்து 10,096 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதில் 500க்கும் மேற்பட்டோர் ஆலோசனை மற்றும் வழிகாட்டல் ஆசிரியர்களாக திகழ்வார்கள். ஒழுக்கக்கேடு செய்த மாணவர்களுக்கு தண்டனை அளிப்பது, இடைநீக்கம் செய்வது அல்லது நீக்குவது போன்ற நடவடிக்கைகள் விதிகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்படலாம்.
அதேசமயம், கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு இணைந்து, ஆண்டு ஒன்று முதல் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான மனநலம் பரிசோதனை மற்றும் தொடர்ச்சியான உளவியல் ஆதரவு திட்டங்களை வலுப்படுத்த உள்ளன. பெற்றோர்கள், சமூகங்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து, பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் ஒழுக்கமிக்க கற்றல் சூழலை உருவாக்க பங்களிக்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டது.