கோலாலம்பூர், 21 அக்: விரைவில் எதிர்பார்க்கப்படும் ‘'லா நினா’ (La Nina) எனும் வானிலை மாற்றம் இம்முறை பலவீனமாகவும், குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கும் என மலேசிய வானிலைத் துறையான மெட் மலேசியாவின் தலைவர் டாக்டர் முகமது ஹிஷாம் முகமது அனிப் தெரிவித்தார்.
இந்த முறை காணப்படும் வானிலை முறை, கடந்த ஆண்டின் இறுதியில் நிகழ்ந்ததற்கு சமமாக உள்ளது மற்றும் நாட்டின் மொத்த வானிலை அமைப்பில் பெரிய தாக்கம் ஏற்படுத்தாது என பெரிட்டா ஹாரியான் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
லா நினா என்பது அபூர்வமான நிகழ்வு அல்ல; இது இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கொரு முறை, எல் நீனோ (El Nino) அல்லது நடுநிலை காலநிலை இடைவெளிகளுடன் மாறி மாறி நிகழும் இயற்கைச் சுற்றுச் சுழற்சி என அவர் கூறினார்.
அவரது விளக்கத்தின்படி, மெட் மலேசியா மற்றும் சர்வதேச வானிலை மாதிரிகளின் பகுப்பாய்வில், இம்முறை வடகிழக்கு பருவமழைக்காலத்தில் எந்தவித தீவிரமான வானிலை மாற்றங்களும் ஏற்படாது எனக் காணப்படுகிறது.
மேலும் சபா மாநிலத்தில் நவம்பர் முதல் பிப்ரவரி 2026 வரை சராசரியை விட அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார். மேலும் மெட் மலேசியா தற்போதைய வானிலை முன்னேற்றத்தை தொடர்ந்து கண்காணித்து, வடகிழக்கு பருவக்காற்று காலத்துக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு உதவுவதற்காக, காலம்தோறும் புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகளை வெளியிடும்.