ஷா ஆலம், அக் 21: நாட்டில் இன்ஃப்ளூயன்சா நோய்தொற்று அதிகரித்து வருவதையடுத்து, அந்த நோயை கண்டறிய தகுந்த சுய பரிசோதனை கிட்டுகளை உள்ளூர் சந்தையில் விற்பனை செய்ய அரசாங்கம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மலேசிய மருந்தக சங்கம் (MPS) வலியுறுத்தியுள்ளது.
தற்போது மருத்துவ சாதன ஆணையதின் கீழ் (MDA) பதிவு செய்த எந்த இன்ஃப்ளூயன்சா சுய பரிசோதனை கருவியும் மலேசிய சந்தையில் இல்லை என மலேசிய மருந்தக சங்கம் தலைவர் பேராசிரியர் அம்ராஹி புவாங் கூறியுள்ளார். தற்போது மலேசியா இன்ஃப்ளூயன்சா தொற்றின் அதிகரிப்பை எதிர்கொண்டு வருவதால், சர்வதேச சந்தையில் பயன்பாட்டில் உள்ள சுய பரிசோதனை கருவிகளின் திறனை அரசு ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தக் கருவிகள் இன்ஃப்ளூயன்சா ஏ (Influenza A) நோய்த்தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிவதில் முக்கிய பங்கு வகிக்கும் என அவர் கூறினார். சமீபத்தில் கிள்ளான் மேரு தேசியப் பள்ளியில் மாணவர் உயிரிழந்ததும் இதற்குக் காரணம் என அவர் கூறினார்.
தொற்றை தாமதமாகக் கண்டறிவது நோய் பரவலை அதிகரிக்கச் செய்யும். இதனால், குறிப்பாக அரசாங்க மருத்துவமனைகளின் அவசரப் பிரிவுகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். இதற்கு முன்னர், சிலாங்கூர் மாநில அரசு தொற்றைத் தடுக்க RM1 மில்லியன் ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீட்டில், உலு லங்காட், கோம்பாக், கிள்ளான் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்களில் உள்ள 12,500 மாணவர்களுக்கு இலவச இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.