கோம்பாக், 21 அக்: ரவாங் பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் நீண்ட நாள் நீர் விநியோக பிரச்சினையை தீர்க்க முக்கிய நீர் குழாய் மாற்றும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது.
இந்தத் திட்டத்தை ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மூன்று முதல் நான்கு தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்ட பழைய குழாய்கள் அடிக்கடி கசிவு மற்றும் நீர் தடை ஏற்படுத்தியதால், அவற்றை மாற்றுவது முக்கிய தீர்வாகக் கருதப்படுகிறது.
இந்த முயற்சி நீண்டகால தீர்வாக இருந்து, குடியிருப்போரின் நீர் சிக்கலை சமாளிக்க உதவும் என நம்புவதாக ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வேய் கியாட் கூறினார். “எங்களின் நோக்கம், குடியிருப்போருக்கு நிலையான மற்றும் நம்பகமான நீர் விநியோக சேவையை வழங்குவதே. பழைய குழாய்களை மாற்றுவதன் மூலம் சமூகத்தின் அடிப்படை தேவைகள் திறம்பட பூர்த்தி செய்யப்படும்,” என்று அவர் தெரிவித்தார்.
ஆயிர் சிலாங்கூர் நிறுவனம் திட்டத்தின் போது தேவையான போக்குவரத்து மாற்றங்கள் குறித்து குடியிருப்போருக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேலும் மாநில அளவில், சிலாங்கூர் அரசு ஆண்டு இறுதிக்குள் சுமார் 300 கிலோமீட்டர் பழைய நீர் குழாய்களை மாற்றுவதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், சிலாங்கூர் மக்களுக்கு உயர்தர நீர் விநியோகத்தை உறுதி செய்யும் ஒரு முக்கியமான முன்னேற்றமாகும். பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் நடைபெறும் குழாய் மாற்றுப் பணிகள் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது