வாஷிங்டன், அக் 21 : அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் விரைவில் மலேசியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகளுக்கு வருகை மேற்கொள்ளவுள்ளதாகவும், சீனாவுடன் நல்லுறவைத் தொடரும் மனப்பாங்கில் இருப்பதாகவும் கூறினார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையிலான வர்த்தக பதட்டம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், ட்ரம்ப் அடுத்த வாரம் தென் கொரியாவில் நடைபெறவுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங் உடனான சந்திப்பை முன்னிட்டு நம்பிக்கையுடன் கருத்து தெரிவித்துள்ளார்.
“நாம் நியாயமான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவோம். நான் சீனாவுடன் நல்லுறவில் இருக்க விரும்புகிறேன் என்று ட்ரம்ப், ஆஸ்திரேலிய பிரதமர்அந்தோனி அல்பானீஸ்யுடன் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நீண்ட உரையாடலின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.
முன்னதாக டிரம்ப், அக்டோபர் இறுதியில் தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய-பசிபிக் பொருளாதார உச்சி மாநாட்டில் சீன அதிபரை சந்திக்க திட்டமிட்டிருப்பதாக பலமுறை குறிப்பிட்டிருந்தார். ஆனால் மலேசியா மற்றும் ஜப்பான் பயணம் குறித்த அவரது முதல் பொது அறிவிப்பு இதுவே ஆகும்.
டிரம்ப் மலேசியாவில் தென்கிழக்காசிய நாடுகளும் அதன் கூட்டாளர்கள் பங்கேற்கும் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொண்ட பின், அக்டோபர் 27 முதல் மூன்று நாள் அதிகாரப்பூர்வ விஜயத்தை ஜப்பானில் மேற்கொள்ளவுள்ளதாக ஜப்பான் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த ஆசியப் பயணம், அவர் ஜனவரியில் இரண்டாவது அதிபர் பதவிக்காலத்தை தொடங்கியதிலிருந்து மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பாகும்.