ஷா ஆலம், அக் 20: பொதுமக்கள் சந்தையில் அல்லது இணையம் வழியாக விற்கப்படும் இன்ஃப்ளூயன்சா சுய பரிசோதனை கிட்களை (Influenza Self-Test Kits) வாங்கவோ அல்லது பயன்படுத்தவோ கூடாது என்று எச்சரிக்கைவிடுத்துள்ளனர். ஏனெனில் இதுவரை எந்த ஒரு தயாரிப்பும் மருத்துவ சாதன ஆணையம் (MDA) மூலம் அங்கீகரிக்கப்படவில்லை.
மலேசியா பொது சுகாதார துறை (PHM) தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், கோவிட்-19 போன்று இன்ஃப்ளூயன்சா தொற்றை கண்டறியலாம் என கூறப்படும் சுய பரிசோதனை கிட்களின் விற்பனை அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் அந்த தயாரிப்புகள் பாதுகாப்பானவையா அல்லது நம்பகமானவையா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இன்ஃப்ளூயன்சா நோயை உறுதிப்படுத்த மருத்துவரால் மட்டுமே சாத்தியமாகும், அதற்கான சரியான மருத்துவ மதிப்பீடு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக பரிசோதனைகள் மிகவும் அவசியம்.
எனவே இணையத்தில் வாங்கிய சுய பரிசோதனை கிட் முடிவின் அடிப்படையில் இன்ஃப்ளூயன்சா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று உறுதிப்படுத்த முடியாது. மருத்துவர் உங்களின் அறிகுறிகள், உடல்நிலை வரலாறு மற்றும் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சை தேவையை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மலேசியா பொது சுகாதார துறை விளக்கியது.
சமீபத்தில் சுகாதார அமைச்சு எதிர்பாராத அளவில் இன்ஃப்ளூயன்சா வழக்குகள் அதிகரிக்கும் வாய்ப்பை எதிர்நோக்கி, அனைத்து சுகாதார நிலையங்களும் பணியாளர்களும் தயாராக உள்ளதாக தெரிவித்தது.