அலோர் காஜா, அக் 18 : பள்ளிகளில் காவல்துறையினரின் இருப்பை அதிகரிக்கும் புதிய திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
இத்திட்டம், இளைய தலைமுறையினர் இடையே குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உள்துறை அமைச்சு வழியாக மலேசிய போலீஸ் படை பள்ளிகளில் அடிக்கடி கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என அமைச்சரவை வழங்கிய உத்தரவின் பின்னர் தீர்மானிக்கப்பட்டது என்றார் அவர்.
“நாம் இந்த ரோந்துப் பணியை ‘ஒம்னி-பிரெசென்ஸ்’ என்ற முறையில் வலுப்படுத்த வேண்டும், அதாவது ஒரு பள்ளியில் காவல்துறையினர் தொடர்ந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என அவர் இன்று நடைபெற்ற மலேசிய பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் துறை 2025 மாநாட்டைத் திறந்து வைத்த பின்னர் பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
அந்த முயற்சியில் மாணவர்களும் பள்ளி சமூகமும் குற்றச்செயல்களைப் பற்றி விழிப்புணர்வு பெறும் வகையில் காவல்துறையினர் மேலும் புதிய திட்டங்களுடன் வர வேண்டும் என்றார் அவர். இந்த நடவடிக்கை கல்வி, தடுப்பு மற்றும் அமலாக்கம் ஆகிய மூன்று அம்சங்களையும் உள்ளடக்கும் ஒருங்கிணைந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.