கோலாலம்பூர், அக் 18: வரவிருக்கும் 47 வது ஆசியான் உச்சநிலை மாநாட்டை முன்னிட்டு, கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் உள்ள மொத்தம் 102 பள்ளிகளுக்கு அக்டோபர் 23 முதல் 29 வரை வீட்டிலிருந்து கற்பித்தல் மற்றும் கற்றல் (PdPR) மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாநாடு நடைபெறும் காலப்பகுதியில் சாலை மூடல் மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, மாணவர்களின் கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த முடிவின் நோக்கம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள், பாதுகாவலர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தினர் தங்கள் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ தகவல் ஊடகங்கள் மூலம் நடைமுறைகள் குறித்து மேல் தகவல்களை பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் கோவிட்-19 காலத்திலும் கடந்த மே மாதத்தில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் போதும் நடைமுறைப்படுத்தப்பட்ட அனுபவத்தின் மூலம், கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறை சீராக தொடர்ந்ததுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி சமூகத்தின் நலனும் பாதுகாக்கப் பட்டதாக தெரிவித்துள்ளது.
இம்முறை நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாடு உலகின் முக்கிய தலைவர்கள் மற்றும் உயர்நிலை பிரதிநிதிகள் கூடும் மிகப்பெரிய சர்வதேச நிகழ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
முன்னதாக பிரதமர் டத்தோ’ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்ததாவது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வருகை தரும் வாய்ப்பு இருப்பதுடன், ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உரையாடல் கூட்டாளர் நாடுகளின் பிரதமர்களும் பங்கேற்க உள்ளனர் என்று கூறினார்.