கிள்ளான், அக்டோபர் 17- சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளி கொண்டாட்டம் இன்று அக்டோபர் 17ஆம் தேதி கிள்ளான் மாநகரின் பாடாங் செட்டியில் சிறப்பாக நடைபெற்றது. சிலாங்கூர் மாநில மனிதவளம், வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு வீ.பாப்பா ராய்டு தலைமையில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் ஐ-சீட் எனப்படும் சிலாங்கூர் இந்திய சமூக மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு இலாகா சார்பாக தொழில் முனைவோருக்கு வர்த்தக உபகரணங்களும் வழங்கப்பட்டது. அதனை சிலாங்கூர் மாநில மந்திரி புசார் எடுத்து வழங்கினார்.
அதுமட்டுமல்லாமல், ஆலய பராமரிப்பு விவகாரங்களில் கவனம் செலுத்தி வரும் சிலாங்கூர் மாநில அரசாங்கம், முஸ்லிம் அல்லாத வழிபாட்டு தலங்களுக்கு நிதியுதவியையும் வழங்கியது. சுமார் 134 வழிபாட்டு தலங்கள் இந்த உதவிகளைப் பெற்றனர்.
லிமாஸ் மற்றும் ஐ-சீட் மூலமாக மாநில அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுக் கொண்டவர்கள் சிலாங்கூர் மாநில அரசுக்கும் மாநில மந்திரி புசாருக்கும் தங்களின் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் கிள்ளான் எம்.பி மாண்புமிகு வீ.கணபதி ராவ், ஒருமைப் பாட்டு துணையமைச்சர் செனட்டர் க.சரஸ்வதி, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், வர்த்தகர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.