ஷா ஆலம், அக் 17: சில நாள்களுக்கு முன் சிஜங்காங், கோலா லங்காட் பகுதியில் ஏற்பட்ட புயலால் பாதிக்கப்பட்ட 64 குடும்பங்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு மொத்தம் RM64,000 நிதி வழங்கியுள்ளது.
ஒவ்வொரு குடும்பமும் RM1,000 தொகையை நிவாரணமாக பெறும். இந்த உதவி, அவர்களின் சுமைகளை குறைக்கும் நோக்கத்தில் வழங்கப்படுகிறது என மாநில டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இச்சம்பவத்தால் 14 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் அரசுத் துறை அதிகாரி ஆவார். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என சிலாங்கூர் சுகாதாரத்துறை தெரிவித்தது. அவர்களுக்கும் தலா RM1,000 நிதி வழங்கப்படும்.
மேலும், கம்போங் மேடான் சமயப் பள்ளிக்கு (SRA) சுமார் RM320,000 நிதியில் பழுது செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்தத் தொகை, மாநில பேரிடர் நிதியிலிருந்து வழங்கப்பட்டது.
இந்தப் புயல், மேரு (கிள்ளான்) மற்றும் சிஜங்காங் (கோலா லங்காட்) பகுதிகளில் உள்ள வீடுகள், பள்ளிகள் மற்றும் வாகனங்களில் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.