கோம்பாக், அக் 17 - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிலாங்கூர் மாநில மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சலுகை விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 'மடாணி ரஹ்மா விற்பனை திட்டம்' (PJRM) 124 இடங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த திட்டம் அக்டோபர் 16 முதல் 22 வரை நடைபெறும் மற்றும் பொதுமக்கள் குறைந்தது 30% தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்க முடியும் என்று சிலாங்கூர் மாநிலத்திற்கான உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்வுச் செலவுக் கட்டுப்பாட்டு அமைச்சகத்தின் (KPDN) இயக்குநர் முகமட் சூஹைரி மாட் ராடி கூறினார்.
உதாரணமாக, பத்து கேவ்ஸ் TF வேல்யூ மார்ட் சூப்பர் மார்க்கெட் இந்த விற்பனையில் கலந்துகொண்டு, 27 வகையான அத்தியாவசிய பொருட்களை ‘ரஹ்மா’ விலையில் வழங்கி வருகிறது. இதில் அரிசி, எண்ணெய், கோதுமை மாவு மற்றும் சர்க்கரை போன்ற பொருட்கள் அடங்கும்.
'மடாணி ரஹ்மா விற்பனை திட்டம்' இவ்வாண்டு முழுவதும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றது. இது, பொதுமக்கள் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க அரசாங்கம் வழங்கும் நேரடி நிவாரணமாகும்.