ஷா ஆலம், அக் 17: கடந்த 15 அக்டோபர் அன்று மேற்கொள்ளப்பட்ட வணிக அமலாக்க நடவடிக்கையில், தாமான் புத்ரா பெர்டானா மற்றும் சைபர்ஜெயா லேக் ஃப்ரண்ட் பகுதிகளில் அனுமதியின்றி வணிகம் செய்தவர்களுக்கு எதிராக 6 நோட்டிஸ்களை வழங்கியதுடன், 5 இடங்களில் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிப்பாங் நகராண்மை கழகம் அதிகாரபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்நடவடிக்கை சிப்பாங் நகராண்மை கழகத்தின் அமலாக்கத் துறையின் வடக்கு மண்டல வணிக ஒழுங்குமுறை பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டது. இது நகராட்சி எல்லைக்குள் நடைபெறும் அனைத்து வணிக நடவடிக்கைகளும் சட்டப்படி அனுமதியுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டது.
பொது இடங்களில் பாதசாரிகள் மற்றும் போக்குவரத்துக்கு தடையாக உள்ள சட்டவிரோதக் கடைகள், இந்தக் கண்காணிப்பில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்பட்டன.
உள்ளூர் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகிய இரு பிரிவினரையும் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் மீது ‘2007ஆம் ஆண்டின் சிப்பாங் நகராண்மை கழகம் சிறு வணிக சட்டம்’ (Undang-Undang Kecil Penjaja MPSepang 2007) என்ற பிரிவு 3ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோட்டிஸ்கள் அனுப்பப்பட்டதுடன், சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்பட்ட வணிக உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வியாபாரிகள் அனைவரும், நகராண்மை கழகத்திடம் சட்டப்படி வணிக அனுமதி (lesen sah) பெற வேண்டும் என சிப்பாங் நகராண்மை கழகம் வலியுறுத்தியுள்ளது, இல்லையெனில் அபராதம், பொருள் பறிமுதல், மற்றும் சட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.