ஷா ஆலம், அக் 17: கிள்ளானில் உள்ள மேரு தேசிப் பள்ளியில் சிறப்பு கல்வி (PPKI) மாணவராக இருக்கும் 8 வயது சிறுவன் ஒருவர், இன்ஃப்ளூயன்சா ஏ தொற்றுக்கு ஆளாகி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.
மாணவனின் மரணம் தொடர்பான தகவல் காவல்துறைக்கு விடியற்காலை அளிக்கப்பட்டது. ஆரம்பக்கட்ட விசாரணையில், மாணவனுக்கு இன்ஃப்லூயன்சா ஏ தொற்று உறுதி செய்யப்பட்டதோடு, அவரது குடும்பத்தினரும் அதே வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது என வட கிள்ளான் மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி விஜயா ராவ் சமாசுலு தெரிவித்தார்.
இச்சம்பவத்தை அடுத்து, மலேசிய சுகாதார அமைச்சு அவசர நடவடிக்கைகளை எடுத்து, மாணவனின் குடும்ப உறுப்பினர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டதுடன், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் சம்பந்தப்பட்ட பகுதியிலும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது இச்சம்பவம் திடீர் மரணம் (Sudden Death) என வகைப்படுத்தப்பட்டுள்ளது. மாணவனின் உடல் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம், மாணவர்களின் உடல்நலம் மற்றும் தொற்று நோய்களுக்கான தடுப்புச் சூழல் குறித்து பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் மேலும் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தை முன்வைக்கிறது. பொதுமக்கள் சிறிது உடல்நலக் குறைவு இருந்தால் உடனடியாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.