கலிஃபோர்னியா, அக் 16 - அமெரிக்கா, ரெட்வூட் சிட்டியில் நடைபெற்ற சிலிக்கோன் வெலி பொது ஸ்குவாஷ் போட்டியின் பட்டத்தைக் கைப்பற்றுவதில் தேசிய ஸ்குவாஷ் வீராங்கனை எஸ். சிவசங்கரி தோல்வியடைந்தார்.
கலிஃபோர்னியாவின் ரெட்வூட் சிட்டியில் உள்ள ஸ்குவாஷ் அரங்கில் இந்த இறுதி ஆட்டம் நடைபெற்றது.
நாட்டின் முதன் நிலை ஸ்குவாஷ் வீராங்கனையான அவர் இவ்வாண்டில் தனது இரண்டாவது பட்டத்தை வெல்லும் இலக்கை நெருங்கியிருந்தார். ஆயினும், இறுதிப்போட்டியில் அவர் அமெரிக்காவின் ஒலிவியா வேவரால் தோற்கடிக்கப்பட்டார்.
உபசரணை நாட்டின் ஒலிவியா வேவரை எதிர்கொண்ட சிவசங்கரி தமது சிறந்த ஆட்டத் திறனை வெளிப்படுத்த முயற்சித்தார்.
இருப்பினும், இப்போட்டியின் மூன்றாவது தரவரிசையில் இருக்கும் அவரால் நடப்பு வெற்றியாளரான ஒலிவியா வேவரை தோற்கடிக்க முடியவில்லை.
இறுதியில், 10-12, 11-4, 4-11, 4-11 என்ற புள்ளிகளில் சிவசங்கரி தோல்வியடைந்தார்.
இதுவரை ஒன்பது ஆட்டங்களில் அவர்கள் இருவரும் சந்தித்திருக்கும் நிலையில், வேவர் சிவசங்கரியை எட்டு முறை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
--பெர்னாமா