கிள்ளான், அக் 16: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிள்ளான் லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்று வரும் சந்தையில் விற்பனையாளர்கள், இவ்வாண்டு விற்பனை கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவித்தனர். பலரும் இதற்குக் காரணமாக இணையத்தல விற்பனை தளங்கள் மற்றும் டிக்டாக் போன்ற சமூக ஊடக வணிகங்களை காரணமாக சுட்டிக்காட்டுகின்றனர்.

“முந்தைய ஆண்டுகளைப் போல இல்லை. இந்த வருடம் விற்பனை மிகவும் குறைவு. பலரும் டிக்டாக் கடைகளில் பொருட்களை வாங்குகிறார்கள். அவர்கள் சொல்வதாவது, விலை குறைவு, பொருட்களும் மலிவாக கிடைக்கிறது என்கிறார்கள். இதனால் நேரடியாக சந்தையில் வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது,” என்றார் மூன்று ஆண்டுகளாக கிள்ளான் தீபாவளி சந்தையில் கார்ப்பெட் விற்பனை செய்து வரும் சிவமலர் மாருதை (50).

அதேபோல், 12 ஆண்டுகளாக ஆடை விற்பனை செய்து வரும் பார்வதி ராஜரத்தினம் (45) “ஐந்து ஆண்டுகளாக இந்த சந்தையில் கடை வைத்திருக்கிறேன். இவ்வாண்டு மக்கள் வருகை மிகக் குறைவு. பலரும் இணையதளத்தில் வாங்க விரும்புகிறார்கள்; விலை மலிவாகவும் பொருட்கள் எளிதாகவும் கிடைக்கிறது. ஆனால் நம்மைப் போன்ற சிறு வியாபாரிகளுக்கு இது சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மக்கள் நம்மைப் போன்ற சிறு வியாபாரிகளையும் ஆதரிக்க வேண்டும்,” என்று வேண்டுகோள் விடுத்தார்.

“சந்தையில் இடம் சரியாக இருந்தாலும், வானிலை காரணமாக மக்கள் வருகை குறைந்துள்ளது என்று வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்து வரும் ரேவதி குணசேகரன் (33) கூறினார். மேலும் மற்ற இனத்தவர்களும் இங்கு பொருட்கள் வாங்குவதை காணும்போது மகிழ்ச்சி அடைவதாக அவர் மீடியா சிலாங்கூரிடம் பகிர்ந்தார். ஆனால், விற்பனை முன்பு ஆண்டுகளை விட குறைவு. ஆன்லைனில் பல கடைகள் இருக்கின்றன; என்றும்,ஆனால் அதன் தரத்தில் நம்பிக்கை வைப்பது கடினம். கடைகளில் வாங்கும் பொருட்களின் தரத்திற்கு அதற்கு சமமாக ஆன்லைன் பொருட்கள் இருக்காது,” என்றார்.

இதேவேளை, பட்டாசு விற்பனை செய்து வரும் ஆத்மநாதன் நாயுடு (33) “மக்கள் இன்னும் தீபாவளி சந்தையில் வந்து வாங்குவது நன்றாகவே இருக்கிறது. நாங்கள் பட்டாசு விற்கும் போது காவல்துறையிடமிருந்து அனுமதி பெற வேண்டும். ஆன்லைனில் வாங்குவதைவிட நேரில் வந்து வாங்குவது பாதுகாப்பாகவும் நம்பிக்கையுடனும் இருக்கும்,” என்றார்.இவ்வாண்டு தீபாவளி சந்தையில் மொத்த மக்கள் வருகை குறைந்திருந்தாலும், விற்பனையாளர்கள் அனைவரும் நம்பிக்கையுடன் கூறியது ஒன்று “தீபாவளி ஆனந்தத்தைக் கொண்டாடும் மக்களின் புன்னகை தான் நமக்குச் சிறந்தது”