கிள்ளான், அக் 16: கடந்த செவ்வாய்க்கிழமை பண்டார் உத்தமா பகுதியில் உள்ள பள்ளியில் நிகழ்ந்த 16 வயது மாணவி கொலை சம்பவம் தொடர்பான ஆரம்ப விசாரணையில், சந்தேகநபரின் செயல் வீடியோ கேம்கள் மற்றும் சமூக ஊடகங்களில் காணப்படும் சில உள்ளடக்கங்களால் தூண்டப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய விளையாட்டு தளங்களை கண்டறியும் பணிகள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக சிலாங்கூர் காவல்துறை தலைவர் டத்தோ ஷஸலி கஹார் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பிரேதப் பரிசோதனை முடிவில் அம்மாணவியின் மரணம் கழுத்திலும் உடலிலும் ஏற்பட்ட பல காயங்களால் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
அதற்கான விரிவான அறிக்கை தயாராகக் குறைந்தபட்சம் ஒரு மாதக் காலம் எடுக்கும் எனக் கூறிய அவர், "இதை விரைவுப்படுத்த சுகாதார அமைச்சுடன் (KKM), குறிப்பாக சம்பந்தப்பட்ட நிபுணர்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் செயல்பட்டு வருகிறோம்" என்றார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க, கல்வி அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமைத்துவத்துடன் சேர்ந்து பள்ளிகளின் பாதுகாப்பு நடைமுறைகளை வலுப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறினார்.