ஷா ஆலாம், அக் 16: நாட்டில் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவல் சம்பவங்கள் சுமார் 83 சதவீதம் பள்ளிகளிலும் பாலர் பள்ளிகளிலும் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தொற்றுநோய் ஆய்வு வாரம் (ME) 41/2025 வரை, பள்ளிகளில் மொத்தம் 352 சம்பவங்களும் பாலர் பள்ளிகளில் 96 சம்பவங்களும் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அஹ்மட் தெரிவித்தார்.
மொத்தம் பதிவான பரவல்களில் 65.8 சதவீதம் பள்ளிகளிலும் , 17 சதவீதம் பாலர் பள்ளிகளிலும் , மீதமுள்ளவை கல்லூரிகள், பணியிடங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் புலாய் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் நாடு முழுவதும் நோய்தொற்று போக்கை கண்டறிவதற்காக சுகாதார அமைச்சு Influenza-like Illness (ILI) மற்றும் Severe Acute Respiratory Infection (SARI) எனும் கண்காணிப்பு முறைகளின் மூலம் தொடர்ந்து மேற்பார்வை செய்து வருகிறது.
தொற்றைத் தடுக்க, பெற்றோர்கள் காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், நிலைமை மோசமடைந்தால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் சுகாதாரக் கல்வியை வலுப்படுத்தி, சம்பவங்களை மாவட்ட சுகாதார அலுவலகத்திற்கு தெரிவித்து, தற்காலிகமாக பள்ளியை மூடும் நடவடிக்கைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.