கோலா லங்காட், அக் 16: நேற்று சிஜங்காங் மற்றும் மேரு பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்கான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அறக்கட்டளை (எம்பிஐ) உடனடி நிதியாக RM400,000 வழங்கியுள்ளது.
இந்த நிதி உதவி மூலம், பள்ளிகளில் கூரை மாற்றம் மற்றும் அடிப்படை வசதிகளை சீரமைக்கும் பணிகள் உடனடியாக தொடங்க முடியும் என எம்பிஐ அறக்கட்டளையின் தலைவர் முகமது அஸ்ரி சைனல் நோர் கூறினார்.
"நேற்று இரவு, மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் எம்பிஐ குழும தலைமை செயல் அதிகாரி டத்தோ தி.எஸ். சைபல்யாசன் எம் யூசுப் ஆகியோருடன் இந்த விஷயத்தில் கலந்துரையாடல் நடத்தினேன்," என்றார் அவர்.
"எம்பிஐ அறக்கட்டளை RM300,000 நிதியை வழங்க ஒப்புக் கொண்டது. மேலும், எம்பிஐயின் வகாலா ஜகாட் நிதி மூலம் RM100,000 கூடுதலாக ஒதுக்கப்பட்டு, மொத்தமாக RM400,000 நிதி வழங்கப்பட்டது," எனத் தெரிவித்தார்.
இவ்வுரையை பாதிக்கப்பட்ட பள்ளிகளை நேரில் பார்வையிட்டபோது அஸ்ரி தெரிவித்தார்.
இந்த நிதி ஆறு பள்ளிகளுக்குப் பங்கிடப்பட்டுள்ளது. அதேசமயம், சிஜங்காங் சட்டமன்ற தொகுதி சேவை மையத்திற்கு RM100,000, மற்றும் மேரு தொகுதிக்கு வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிக்காக RM50,000 ஒதுக்கப்பட்டுள்ளது.
"சீரமைப்பு பணிகள் காலதாமதமின்றி துவங்க வேண்டும். ஒவ்வொரு தொகுதியின் சேவை மையங்கள் வழியாக ஒப்பந்ததாரர்கள் தங்களது செலவுகளை பின்பு கோரிக்கையாக சமர்ப்பிக்கலாம்," எனத் தெரிவித்தார்.
இந்த உடனடி நிதி உதவி, புயலால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் குடியிருப்புகளுக்கு விரைவான நிவாரணத்தையும், மாணவர்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உறுதி செய்யும் நோக்கத்துடன் வழங்கப்பட்டுள்ளது என்றார்.