ஷா ஆலாம், அக் 16 : சபாவின் 17வது மாநிலச் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு (PRN) எதிர்வரும் 29 நவம்பர் 2025 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என மலேசிய தேர்தல் ஆணையம் (SPR) அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலுக்கான வேட்பாளர் நியமன நாளாக நவம்பர் 15 (சனிக்கிழமை) என குறிக்கப் பட்டுள்ளதுடன், முன்னதாக வாக்களிக்கும் நாள் நவம்பர் 25 (செவ்வாய்க்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மலேசிய தேர்தல் ஆணையம் தலைவர் டத்தோஸ்ரீ ரம்லான் ஹாருன் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.
பிரச்சாரக் காலம் மொத்தம் 14 நாட்கள் ஆகும். இது நவம்பர் 15 அன்று தொடங்கி, நவம்பர் 28 நள்ளிரவு 11.59 மணிக்கு முடிவடையும்.
இதற்காக பயன்படுத்தப்படவுள்ள தேர்தல் வாக்காளர் பதிவேடு (Daftar Pemilih Pilihan Raya – DPPR), 2025 ஆகஸ்ட் மாதம் வரை புதுப்பிக்கப்பட்ட கூடுதல் வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டதாகும். இது 2025 அக்டோபர் 5ஆம் தேதி வரை புதுப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மலேசிய தேர்தல் ஆணைய தரவின்படி, இந்தப் பதிவேட்டில் மொத்தமாக 1,784,843 வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். வாக்காளர்கள் தங்களது வாக்களிப்பு மையம் மற்றும் பிற தகவல்களை https://mysprsemak.spr.gov.my என்ற இணையதளம், ``MySPR Semak`` செயலி, அல்லது SPR ஹாட்லைன் (03-8892 7018) வழியாக நவம்பர் 1ஆம் தேதி முதல் சரிபார்க்கலாம்.
``SPR`` ஹாட்லைன், ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு சேவையளிக்கும். வாக்களிப்பு ஏற்பாடுகள் குறித்து தகவல் தேவைப்படும் அனைவரும் இந்த தளங்களை பயன்படுத்தலாம்.