புத்ராஜெயா, அக் 16: சிலாங்கூர், தெலுக் பாங்லிமா காராங்கில் நேற்று மாலை ஏற்பட்ட புயல் காரணமாக சேதமடைந்த நான்கு பள்ளிகளை சுத்தம் செய்வது மற்றும் சேதத்தை மதிப்பீடு செய்வது கல்வி அமைச்சகத்தின் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
அந்த நான்கு பள்ளிகள் முறையே சிஜங்காங் ஜெயா தேசிய இடைநிலைப் பள்ளி (SMK Sijangkang Jaya), சிஜங்காங் ஜெயா தேசியப் பள்ளி (SK Sijangkang Jaya), கம்போங் மேடான் தேசியப் பள்ளி (SK Kampung Medan) மற்றும் ஜாலான் தாஞ்சோங் தேசியப் பள்ளி (SK Jalan Tanjung) ஆகும்.
சேத மதிப்பீட்டு பணிகள் முடிந்தவுடன், பள்ளி வசதிகளை விரைவில் பழுதுபார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
புயலில் பாதித்த அனைத்து பள்ளிகளும் தற்காலிகமாக வீட்டிலிருந்தே கற்றல் மற்றும் கற்பித்தல் (PdPR) முறையில் வகுப்புகளை நடத்தும்படி அறிவிக்கப்பட்டுள்ளன. இது கற்றல் செயல்முறைக்கு இடையூறு இல்லாமல் நடைபெறவும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பும் உறுதிசெய்யவும் ஆகும்,” என கூறப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய வானிலை மாற்றங்களை முன்னிட்டு, மாநிலக் கல்வித் துறைகள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.