கோலாலம்பூர், அக் 15 - நாளை முதல் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமம் (எல்.எம்.எஸ்) வைத்திருக்கும் மலேசியர்களுக்கு BUDI95 எனப்படும் ரோன்95 பெட்ரோலுக்கான மானிய உதவிக்கு விண்ணப்பிக்க சிறப்பு அகப்பக்கம் செயல்படவுள்ளது.
சிங்கப்பூரில் பணிபுரியும் மலேசியர்கள், குறிப்பாகப் பேருந்து ஓட்டுநர்கள் போன்று ஒட்டுநர் துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் கருத்துகளை தொடர்ந்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
தற்போதைய உரிம விதிமுறைகளின் படி, ஓட்டுநர் ஒருவர் மலேசியா அல்லது சிங்கப்பூர் என்று ஏதேனும் ஓர் உரிமத்தை மட்டுமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவதால், சிங்கப்பூரில் பணிப்புரியும் மலேசியர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை எல்.எம்.எஸ்-ஆக மாற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக அவர் கூறினார்.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இத்தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
சம்பந்தப்பட்டவர்களின் உதவித் தொகை விண்ணப்பங்களை மதிப்பிடுவதற்கு நிதி அமைச்சிற்கு உதவும் வகையில், ஒரு சிறப்பு அகப்பக்கத்தை சாலை போக்குவரத்து துறை அமைத்துள்ளதாகவும், அது நாளைத் தொடங்கி செயல்படும் என்றும் லோக் கூறினார்.
-- பெர்னாமா